வெள்ள பாதிப்பு நிவாரண பணிக்கு தமிழகத்துக்கு ரூ.1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


வெள்ள பாதிப்பு நிவாரண பணிக்கு தமிழகத்துக்கு ரூ.1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Nov 2021 4:51 AM GMT (Updated: 12 Nov 2021 4:51 AM GMT)

தமிழக வெள்ள நிவாரண பணிக்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புயல் மற்றும் மழை நிவாரணப் பணிகளையும், உதவிகளையும் செய்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் சில ஆயிரம் கோடி ரூபாயாவது தேவைப்படும்.

மழை - வெள்ளத்தால் பல பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுதல், வெள்ளப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டல், மக்களுக்கு உணவு வழங்குதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மழை ஓய்ந்த பின்னர் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான நிவாரணப் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால், மழை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் புயல் மற்றும் மழை பாதிப்புகளை உடனடியாக மதிப்பிடுவது சாத்தியமே இல்லை. பாதிப்பு மற்றும் சேத மதிப்பை கணக்கிட்டு, மத்திய அரசிடம் நிதியுதவி கோருவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகக்கூடும். ஆனால், அதுவரை மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு தேவையான நிதி தமிழக அரசிடம் இல்லை.

எனவே, புயல் மற்றும் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு முதற்கட்டமாக குறைந்தபட்சம் ரூ.1000 கோடி நிதி வழங்க வேண்டும். மழை ஓய்ந்த பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். புயல் மற்றும் மழை சேத மதிப்பீடு முடிவடைந்த பின்னர் தமிழக அரசு கோரும் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story