வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:09 PM GMT (Updated: 12 Nov 2021 10:09 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

சென்னை,

பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிசெய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படுகிறது. எனவே, பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்று இருக்கிறதா என்பதை வாக்காளர்கள் முதலில் சரிபார்க்க வேண்டும். அதில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால், தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வரும் ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், இதுவரை பெயரை சேர்க்காதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

4 சிறப்பு முகாம்கள்

எனவே அதற்கு வசதியாக இம்மாதம் 13 (இன்று), 14 (நாளை) மற்றும் 27, 28-ந்தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம்களை நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை (பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம்) மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை அங்குள்ள அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் 1-ந்தேதி தொடங்கியது. வரும் 30-ந்தேதிவரை நடைபெறுகிறது. அந்த தேதிக்குள் தகுதியுள்ள நபர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள், அதில் தேவையான திருத்தங்களையும் அதற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து திருத்திக்கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு

ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பினால், www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதளங்களிலும், வாக்காளர் ஹெல்ப்லைன் என்ற செல்போன் செயலி மூலமும் பதிவு செய்யலாம்.

2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயதை பூர்த்திசெய்யக்கூடிய மற்றும் இதுவரை பட்டியலில் பெயர் பதிவு செய்யாத அனைவரும் 6-ம் எண் விண்ணப்பத்தை அளித்து பெயர் பதிவு செய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதி அளிக்கும் பகுதியை கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புகைப்படம் தெளிவாக இருப்பதற்காக 200 டிபிஐ ரெசல்யூசன் கொண்ட புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

என்ன விண்ணப்பங்கள்?

ஏற்கனவே பெயர் பதிவு செய்து, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம்மாறிய வாக்காளர்கள், திருத்தத்துக்காக 6-ம் எண் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள் 8ஏ விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டியலில் திருத்தங்கள் ஏதாவது மேற்கொள்ள 8-ம் எண் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ, தொலைந்துவிட்டாலோ, சிதைந்துவிட்டாலோ புதிய அட்டைக்காக தாலுகா அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் 001 விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

Next Story