9 மாவட்டங்களுக்கான நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் எல்லை மறுவரையறை அரசிதழ் வெளியீடு


9 மாவட்டங்களுக்கான நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் எல்லை மறுவரையறை அரசிதழ் வெளியீடு
x
தினத்தந்தி 12 Nov 2021 10:23 PM GMT (Updated: 12 Nov 2021 10:23 PM GMT)

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு எல்லை மறுவரையறை செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த நிலையில், வார்டு மறுவரையறை, மக்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், நெல்லை ஆகிய 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு முறையே செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

டிசம்பரில் தேர்தல்

இந்த 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் நடைபெறாமல் இருந்தது. அந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கடந்த அக்டோபரில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

அரசிதழில் வெளியீடு

இந்த தேர்தலுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் முடிக்கப்பட்டு, எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான விவரங்கள் அரசிதழில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதில், தனித்தனியாக பேரூராட்சிகள், நகராட்சிகளின் வார்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு வார்டுக்குமான எல்லைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Next Story