தி.மு.க. அரசு வெள்ள நீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்


தி.மு.க. அரசு வெள்ள நீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்
x
தினத்தந்தி 12 Nov 2021 11:09 PM GMT (Updated: 12 Nov 2021 11:09 PM GMT)

தி.மு.க. அரசு வெள்ள நீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், 3-வது நாளாக சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், கோவிலம்பாக்கம், காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியையும் அவர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம், கீழ்க்கட்டளை அம்மாள்நகர், தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை-ஆலயம்மன் கோவில், மயிலாப்பூர் தெப்பக்குளம் பகுதிகளிலும் அவர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகளிர் அணி செயலாளர் வளர்மதி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தூர்வாரவில்லை

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடந்து சென்று குடியிருப்பு நலவாசிகளுக்கு ஆறுதல் கூறி, நல உதவிகளை வழங்கினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படாத காரணத்தால்தான் மழைநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே நான் முதல்-அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆகஸ்டு மாதமே தூர்வாரி விடுவோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவர்கள் எதையும் செய்யவில்லை.

சென்னையை பொறுத்தவரை 2,100 நீர்வழிபாதைகள் தூர்வாரப்படவில்லை. 523 உள்புற சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நாங்கள் வானிலை ஆய்வு அறிவுறுத்தியவுடனே பணிகளை தொடங்கி விடுவோம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் உடனடியாக நியமித்தோம். ஆனால் இன்றைக்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் தொடர்ந்து தேங்கியிருந்தால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அரசு வேகமாக செயல்பட்டு, தண்ணீரை அகற்ற வேண்டும்.

திட்டமிட்டு செயல்படவில்லை

முதல்-அமைச்சர் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலே இன்னும் பெரும்பாலான இடங்களிலே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியுள்ள 523 இடங்களிலும் உணவு, பால் எதுவும் கிடைக்கவில்லை. இந்த அரசு இனியாவது அக்கறை செலுத்த வேண்டும்.

தியாகராயநகர் பகுதியிலே ஸ்மார்சிட்டி திட்டத்தின் மூலமாக பணிகளை செய்யாததால் தண்ணீர் தேங்குகிறது என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். தி.மு.க. அரசு பொறுப்பேற்று 6 மாதம் ஆகிறது. அவர்கள் இன்னும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்க்கவில்லை. அவர்கள் திட்டமிட்டு செயல்படாத காரணத்தால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

தப்பிக்க பார்க்கிறார்கள்

சென்னையில் அவர்கள் முழுமையாக தூர்வாரவில்லை. 160 என்ஜினீயர்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். புதிய என்ஜினீயர்களுக்கு தண்ணீர் எங்கே தேங்கியிருக்கிறது என்பது எப்படி தெரியும். அவர்களுக்கு நிர்வாக திறமை இல்லை. ஸ்மார்சிட்டி திட்டம் சிறப்பான திட்டம் என்பதற்கு விருதை பெற்று இருக்கிறோம். உள்ளாட்சி துறையில் பல விருதுகளை பெற்றிருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் மேயராக இருந்திருக்கிறார். அப்போது எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராக இருந்தபோதும் அவர் எதுவும் செய்யவில்லை.அ.தி.மு.க. அரசுதான் வடிகால் அமைப்பை சரியாக கையாண்டது. வெள்ள நீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.

ரூ.2 ஆயிரம் நிவாரணம்

டி.பி.சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொழிலாளியின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு பாராட்டுகள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விலை இல்லாமல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டார். கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் ஓ.பன்னீர்செல்வம் குறை கேட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மிக அதிகமான மழை பெய்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு இன்னும் முழு வீச்சில் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

முழு வீச்சில் ஈடுபட வேண்டும்

எப்போதெல்லாம் மக்களுக்கு இயற்கை இடர்பாடு வருகிறதோ அந்த நேரத்தில் எல்லாம் அ.தி.மு.க. களத்தில் நின்று பணியாற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் அ.தி.மு.க. தான் மக்கள் பணியில் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலையிலே இருக்கும்.

தமிழக அரசு முழு வீச்சில் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.

பொறுப்புகளை தட்டிக்கழிக்கக்கூடாது

கடந்த அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றச்சாட்டுகளை கூறி, தங்களுக்கான பொறுப்புகளை ஆளுகிறவர்கள் தட்டிக்கழிக்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் என்ன வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தாரோ அதை தான் செய்ய வேண்டுமே தவிர வாக்குவாதத்திலும், விவாதத்திலும் ஈடுபடுவது நல்லது அல்ல. நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. மக்களை சந்தித்து ஆறுதல் கூறவே வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர் விருகை என்.ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story