வெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி - மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு


வெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி - மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 6:44 AM GMT (Updated: 14 Nov 2021 4:52 PM GMT)

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி செல்கிறார்.

கன்னியாகுமரி,

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை பெய்து முடிந்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 

தற்போது கடந்த சில தினங்களாகவே மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. அதன்பிறகும் அடங்காத மழை இரவிலும் நீடித்தது.

மலையோரம் மற்றும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய, விடிய பெய்த மழையால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இரவிலும் மழை நீடித்தது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணித்து அதற்கு ஏற்ப அணையிலிருந்து கூடுதலாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.  

தற்போது அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, பழையாறு என்று அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஆற்று வெள்ளம் அதிகரித்ததாலும், மழை நிற்காததாலும் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சிக்கியவர்கள் வீட்ைட விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். குறிப்பாக இறச்சகுளம், பூதப்பாண்டி, நாவல்காடு, நங்காண்டி, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, வீரவநல்லூர், புரவசேரி, ஈசாந்திமங்கலம், செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம் , சுசீந்திரம், கற்காடு, தேரூர், காட்டுப்புதூர், தேரேகால்புதூர், நாகர்கோவில் புத்தேரி, சக்திகார்டன், ஊட்டுவாழ் மடம், ரெயிவே காலனி, தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவட்டார், குலசேகரம், அருமனை, களியல், பளுகல், முன்சிறை, நித்திரவிளை, கொல்லங்கோடு, குழித்துறையில் ஒரு பகுதி, திக்குறிச்சி, குளச்சல், குருந்தன்கோடு, தேங்காப்பட்டணம், வைக்கல்லூர், பார்த்திபபுரம், மங்காடு, பள்ளிக்கல் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரியில் இன்றும் மழை மழை விட்டு பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனிடையே,  மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின்  நாளை கன்னியாகுமரி செல்கிறார். 


Next Story