கன்னியாகுமரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு...!


கன்னியாகுமரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு...!
x
தினத்தந்தி 14 Nov 2021 7:19 AM GMT (Updated: 14 Nov 2021 7:19 AM GMT)

மழைக்காலம் முடிந்த பின், எதிர்க்கட்சி செய்த அக்கிரமத்தை தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்கிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குமரிமாவட்டத்தில் தற்போது நிலைமையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன். திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டு போடாத மக்களுக்கும் சேவை செய்வதே எனது கொள்கை. மழை வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பற்றி கவலைப்படுவதில்லை. மழைக்காலம் முடிந்த பின், எதிர்க்கட்சி செய்த அக்கிரமத்தை தனி ஆணையம் அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான குழு ஆய்வு செய்து இன்று அல்லது நாளை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story