மேட்டூர் அணையில் நீர்திறப்பு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையில் நீர்திறப்பு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 8:08 AM GMT (Updated: 14 Nov 2021 8:08 AM GMT)

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 28 ஆயிரம் கன அடியில் இருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வந்ததால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.40 அடியை எட்டிய நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இரவு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41-வது முறையாக அணையின் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து உபரியாக 22 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை மேட்டூர் அணையில் நீர்திறப்பு அளவு 22 ஆயிரம் கன அடியில் இருந்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உபரிநீர் திறப்பால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணையின் மூலம் பயன் பெறும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story