ரூ.25¼ கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு வெடி வைத்து தகர்ப்பு


ரூ.25¼ கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு வெடி வைத்து தகர்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 8:57 PM GMT (Updated: 14 Nov 2021 8:57 PM GMT)

தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25¼ கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 35 லட்சத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது.

ஆனால் திறந்து 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சீரமைப்பில் சிக்கல்

இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ரூ.15 கோடியில் அணைக்கட்டை சீரமைப்பதற்காக கோப்புகளை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்குள் மழைக்காலம் தொடங்கி ஆற்றில் வெள்ளம் செல்வதால் சீரமைப்பு பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தளவானூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து தண்ணீர் இரு கரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்துச்சென்றது. ஒவ்வொரு நாளும் அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இதனால் அணைக்கட்டின் 3 மதகுகளும் அதன் உறுதிதன்மையை இழந்து, ஒரு புறமாக சாய்ந்தது. இந்த 3 மதகுகளும் எந்தநேரத்திலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சூழல் நிலவியது.

கரும்பு பயிர்களை அடித்துச்சென்றது

இந்த அணைக்கட்டை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதோடு அணைக்கட்டின் கரைப்பகுதியில் மண் அரிப்பை தடுக்க மணல்மேட்டின் மீது கருங்கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். இருப்பினும் அணைக்கட்டுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் இந்த தடுப்பு நடவடிக்கை பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அணைக்கட்டின் இடதுபுறத்தில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் அருகே உள்ள கரையிலும் நேற்று முன்தினம் காலை அரிப்பு ஏற்பட்டு அவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் அருகில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து கரும்பு பயிர்களை அடித்துச்சென்றது.

கலெக்டர் உத்தரவு

இதுபற்றி அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை நேரில் வந்து சேதமடைந்த அணைக்கட்டை பார்வையிட்டனர்.

அப்போது சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,500 கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டதாக தகவல் வந்தது. இந்த தண்ணீர் வந்தால், தென்பெண்ணையாற்றின் கரையில் மேலும் உடைப்பு ஏற்பட்டு, தளவானூர் கிராமத்திற்குள் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே சாய்ந்து நிற்கும் 3 மதகுகளையும், அதன் அருகில் உள்ள அணைக்கட்டு பகுதிகளையும் சுமார் 50 அடி நீளத்திற்கு மட்டும் வெடி வைத்து தகர்க்க கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

வெடிவைத்து தகர்ப்பு

இதனைத்தொடர்ந்து 3 மதகுகள் மற்றும் கரைப்பகுதி கான்கிரீட் பகுதியில் 100 ஜெலட்டின் குச்சிகள், 200 தோட்டாக்களை 20 இடங்களில் வைத்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு வெடியை வெடிக்க வைத்து, அணைக்கட்டு தகர்க்கப்பட்டது. அப்போது வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அணைக்கட்டு சிறிய, சிறிய துண்டுகளாக 100 மீட்டர் தூரத்திற்கு விழுந்தது.

ஆனால் அந்த அணைக்கட்டு முழுமையாக தகர்க்கப்படவில்லை. அணைக்கட்டில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டது. எனவே இரவில் தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் வந்தால் அணைக்கட்டு அடித்துச்செல்ல வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடைபெறவில்லை என்றால் இன்று(திங்கட்கிழமை) மீண்டும் வெடி வைத்து முழுமையாக தகர்க்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story