சென்னையில் 24 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ‘மெகா கிளினீங்’ பணி தீவிரம்


சென்னையில் 24 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ‘மெகா கிளினீங்’ பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Nov 2021 10:11 PM GMT (Updated: 14 Nov 2021 10:11 PM GMT)

சென்னையில் 24 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ‘மெகா கிளினீங்’ பணி தீவிரமாக நடந்து வருகிறது என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் மழைநீர் தேங்கி இருந்த அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் அதுவும் சரி செய்யப்பட்டு விடும். கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி, குப்பை கூழமாக காட்சி அளித்தது. சென்னை மாநகரை சுத்தப்படுத்தும் விதமாகவும், நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும் ‘மெகா கிளினிங்’ பணி நடந்து வருகிறது.

இந்த பணியில் 24 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதோடு கூடுதலாக பிற நகராட்சி பகுதிகளில் இருந்து 500 பணியாளர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தற்போது மாநகராட்சியின் முக்கிய நோக்கமாக இருப்பது, ‘அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்வதும், மழை வெள்ளத்தால் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு தார்சாலைகள் போடுவதும், தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை வெளியேற்றி, கிருமிகளை அழிப்பதற்காக பிளீச்சிங் பவுடர் தூவும் பணிகளும் ஆகும். அவை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

டெங்கு தடுப்பு

அதேபோல் கொசுக்களை ஒழிப்பதற்காக 3 ஆயிரத்து 400 மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக 68 வண்டிகளில் பொருத்தப்பட்ட புகை போக்கி மூலமும், கைகள் மூலம் தெளிக்கப்படும் 267 புகை போக்கிகள் மற்றும் தண்ணீரில் தேங்கி உள்ள கொசுப்புழுக்களை ஒழிக்கும் ‘ஸ்பிரே’ மூலமும் கொசுவை ஒழிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னையில் டெங்குவை தடுக்க புகைப்போக்கி மூலமும், ‘ஸ்பிரே’ மூலமாகவும் குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்காமல் இருந்தால், பொதுமக்கள் மாநகராட்சியிடம் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக அங்கு பணிகள் மேற்கொள்ளப்படும். திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் தொடர்ந்து குப்பைகளை அகற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story