கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Nov 2021 2:17 AM GMT (Updated: 15 Nov 2021 2:17 AM GMT)

குமரி மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளசேத பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

நாகர்கோவில், 

கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வடியாமல் உள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதோடு, கடும் வெள்ளத்தால் பல சாலைகளும் சேதமடைந்தன.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தார். அதன்படி அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் நேற்று குமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் குமரி மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதையொட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் காலையில் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வரும் அவர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தோவாளை பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை பகுதிக்கு சென்று அணை மற்றும் வெள்ள சேத பகுதிகளையும், மணவாளக்குறிச்சி பெரிய ஏலா பகுதியில் வெள்ள சேத பகுதிகளையும் பார்வையிடுகிறார்.

இதையடுத்து நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர் மதிய உணவு அருந்துகிறார். பின்னர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வெள்ள சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வு கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலம் நெல்லை புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story