விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் அடையாளம் பகவான் பிர்சா முண்டா எல்.முருகன் புகழாரம்


விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் அடையாளம் பகவான் பிர்சா முண்டா எல்.முருகன் புகழாரம்
x
தினத்தந்தி 15 Nov 2021 11:04 PM GMT (Updated: 15 Nov 2021 11:04 PM GMT)

விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் அடையாளம் பகவான் பிர்சா முண்டா என்று பழங்குடியினர் கவுரவ தினத்தையொட்டி எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ந் தேதி (நேற்று) பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை துறைகள் துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய விடுதலையின் பவளவிழாவை இந்தியா கொண்டாடி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அடக்குமுறைகள் நிரம்பிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தாய்நாட்டின் விடுதலைக்காக துணிவோடு போராடிய வீரர்களின் வரிசையில் பகவான் பிர்சா முண்டாவின் பெயர் மட்டும் உயர்ந்து நிற்கிறது. பிர்சா முண்டா மிகக்குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்தார் என்றாலும், அவரது வாழ்க்கை துணிவுமிக்கது. தீரமிக்க செயல்களும், புனிதமான நற்செயல்களும் எண்ணற்றவர்கள் அவரை பின்பற்றுவோராக மாற்றின.

1875-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தின் உளிஹாட்டு என்ற கிராமத்தில் முண்டா பழங்குடி இனத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த பிர்சா, கடுமையான வறுமையுடனேயே தனது குழந்தை பருவத்தை கழித்தார். இயற்கையோடும், இயற்கை தரும் ஆதார வளங்களோடும் ஒன்றிணைந்து வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகள் வசிக்கும் மத்திய மற்றும் கிழக்கு பகுதி இந்தியாவின் அடர்ந்த காடுகளிலும் ஆங்கிலேய ஆட்சி தனது சுரண்டலை நீடிக்க தொடங்கியது. 1880-ம் ஆண்டுகளில் ஆங்கிலேய ஆட்சி வனப்பகுதிகளில் அறிமுகப்படுத்திய ஜமீன்தாரி முறை பழங்குடியினரை அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்பதில் இருந்து, அந்த நிலங்களில் உழைக்கும் உழைப்பாளிகள் என்ற வகையில் மாற்றியது. இவை பழங்குடியினரின் நலனுக்காக போராட வேண்டும் என்ற உணர்வை பிர்சாவிடம் உருவாக்கியது.

சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்

மக்களின் அபிமானத்தை பெற்ற அவர், மிக விரைவிலேயே ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே அவர் 1900 ஜனவரி 9-ந் தேதி உயிர்நீத்தார். எனினும் பகவான் பிர்சா முண்டாவின் உயிர்த்துடிப்புமிக்க போராட்டம் வீணாகவில்லை. பழங்குடிகளின் மோசமான நிலை குறித்தும், அவர்கள் மீது நடத்தப்படும் குரூரமான சுரண்டல் குறித்தும் ஆங்கிலேய ஆட்சி உணரவேண்டிய கட்டாயத்தையும் அவரது போராட்டம் ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே பழங்குடிகளை பாதுகாக்கும் வகையில் 1908-ம் ஆண்டின் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்டது. மிக முக்கியமான இந்த சட்டம் பழங்குடிகளின் நிலத்தை பழங்குடியல்லாத பிரிவினருக்கு கைமாற்றுவதை தடை செய்ததோடு, பழங்குடியினருக்கு மிகப்பெரும் நிவாரணத்தையும் கொண்டுவந்தது.

இதன் மூலம் பழங்குடியினரது உரிமைகளை பாதுகாக்கும் தனி சிறப்புமிக்கதொரு சட்டமாகவும் மாறியது. அவர் மறைந்து 121 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட பகவான் பிர்சா முண்டா இன்றும் தொடர்ந்து லட்சோப லட்சம் இந்தியர்களுக்கு உத்வேகம் ஊட்டுபவராகவே இருந்து வருகிறார். நமது விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒருவராக பகவான் பிர்சா முண்டா திகழ்கிறார். பல்வேறு பழங்குடி இனத்தவரும் இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தை வலுப் படுத்தி உள்ளனர். ஏதோ சில காரணங்களால், நமது புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் இந்த பழங்குடிகளின் மகத்தான பங்களிப்புக்கு முறையான இடம் அளிக்கவில்லை.

இந்திய மதிப்பீடுகள்

எனினும் விடுதலை போராட்டத்தின் மாமணிகளை போற்றும் மாபெரும் திருவிழாவை கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளதோடு, விடுதலை போராட்டத்தில் பங்கேற்றபோதிலும் உரிய இடம்பெறாத வீரர்களின் துணிவையும், தியாகத்தையும் ஆய்வு செய்யவும், புரிந்துகொள்ளவும் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது திறமைமிக்க தலைமையின் கீழ், பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15-ந் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் பழங்குடி மக்கள் இன பெருமையை கொண்டாடும் விழாவை கொண்டாடுவதன் மூலம் முதன் முறையாக பழங்குடியினரின் பெருமையும், பங்களிப்பும் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் இன பெருமைக்கான விழா நாளில் துணிவு, விருந்தோம்பல், தேசிய பெருமிதம் ஆகிய இந்திய மதிப்பீடுகளை வளர்த்தெடுப்பதிலும் அதன் கலாசார பாரம்பரியத்தை பாது காப்பதிலும் இந்தியாவின் பழங் குடி மக்கள் எடுத்துவந்துள்ள முயற்சிகளை அங்கீகரித்து நாம் நினைவு கூர்வோமாக.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story