வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய: தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய: தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 15 Nov 2021 11:09 PM GMT (Updated: 15 Nov 2021 11:09 PM GMT)

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களுக்காக 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் 1-ந் தேதி தொடங்கியது. அதற்கான வாக்காளர் வரைவு பட்டியல் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலின்படி தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 ஆகும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. வரும் ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் தகுதியுள்ள நபர்கள், இதுவரை பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் போன்றோர், தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே தங்களை பட்டியலில் பதிவு செய்துள்ளவர்கள், தேவையான திருத்தங்களை இந்த காலகட்டத்தில் செய்துகொள்ளலாம்.

5.90 லட்சம் விண்ணப்பம்

அதற்கு வசதியாக கடந்த 13, 14-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை (பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம்) மேற்கொள்ள விரும்புவோர் அந்த 2 நாட்களிலும் நடந்த முகாம்களில் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் திருத்தங்களுக்காக இந்த 2 நாட்களில் மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரத்து 539 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

13-ந் தேதியன்று 2 லட்சத்து 36 ஆயிரத்து 596 விண்ணப்பங்களும், 14-ந் தேதி 3 லட்சத்து 53 ஆயிரத்து 943 விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.

கள ஆய்வு

இவற்றில் பெயர் சேர்ப்பிற்காக மட்டும் (6-ம் எண் விண்ணப்பம்) 4 லட்சத்து 38 ஆயிரத்து 383 விண்ணப்பங்கள், இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வு செய்து, அதில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் அதை ஏற்பார்கள். வருகிற 27, 28-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இதில் வாய்ப்பை தவறவிட்டவர்கள் அடுத்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டார்.

Next Story