பயிர் சேதம்: முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பித்த அமைச்சர்கள் குழு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Nov 2021 7:16 AM GMT (Updated: 16 Nov 2021 7:16 AM GMT)

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை, அமைச்சர்கள் குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது.

சென்னை, 

கன மழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கின. இதுகுறித்து ஆய்வு செய்து,பயிர் சேத விபரங்களை அறிய அமைச்சர்கள் குழுவை 11ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையிலான இந்த குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஏதுவாக முதல்-அமைச்சருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அமைச்சர்கள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத விவரங்களை பார்வையிட்ட ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை நேரில் அளித்தனர். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17,46,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், சுமார் 68,652 விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story