7 வயது சிறுமியை கொன்றுவிட்டு தாய்-மகள் தற்கொலை


7 வயது சிறுமியை கொன்றுவிட்டு தாய்-மகள் தற்கொலை
x
தினத்தந்தி 16 Nov 2021 8:14 PM GMT (Updated: 16 Nov 2021 8:14 PM GMT)

இளைய மகள் மாயமானதால் 7 வயது சிறுமியை கொன்று விட்டு தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மடத்துப்பாளையம் கோட்டைக்காட்டை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி மல்லிகா (வயது 57). இந்த தம்பதிக்கு அமுதா (வயது 35), மற்றும் 31 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் பட்டதாரிகள். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சின்னச்சாமி இறந்து விட்டார். அமுதாவுக்கு திருமணமாகி 7 வயதில் தனன்யா என்ற மகள் இருந்தாள். அமுதா கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.இந்தநிலையில் இளைய மகளுக்கு திருமணம் செய்ய தாய் மல்லிகாவும், அக்காள் அமுதாவும் ஏற்பாடு செய்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் நேற்று முன்தினம் மல்லிகாவின் இளைய மகள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும், யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கினர்

இதையறிந்த மல்லிகாவும், அமுதாவும் மனமுடைந்து தற்கொலை முடிவெடுத்தனர். இதுபற்றி மல்லிகா உறவினர் ஒருவருக்கு செல்போனில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் பதறி போன உறவினர் பதறி அடிக்குக்கொண்டு மல்லிகா வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது அங்கு ஒரு அறையில் ஒரே கயிற்றில் அமுதாவும், குழந்தை தனன்யாவும் பிணமாக தூக்கில் தொங்கினார்கள். மற்றொரு அறையில் மல்லிகா தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தனன்யாவை பாட்டி மல்லிகாவும், தாய் அமுதாவும் சேர்ந்து தூக்கு மாட்டி கொலை செய்துவிட்டு, பின்னர் அதே கயிற்றில் அமுதாவும், மற்றொரு அறையில் மல்லிகாவும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

எனினும், குழந்தையை கொன்றுவிட்டு, தாயும்-மகளும் தற்கொலை செய்து செய்துகொண்டதற்கு மல்லிகாவின் இளைய மகள் வீட்டைவிட்டு சென்றதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story