‘சென்னையில் கனமழையை எதிர்கொள்ள தயார்’ - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி


‘சென்னையில் கனமழையை எதிர்கொள்ள தயார்’ - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
x
தினத்தந்தி 18 Nov 2021 3:36 AM GMT (Updated: 18 Nov 2021 3:36 AM GMT)

சென்னையில் 24 மணிநேரமும் அவசர கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “கனமழை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகளும் தயார் நிலையில் உள்ளன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் எதிர்பார்த்த கனமழை இதுவரை பெய்யவில்லை. படகுகள் அனைத்து இடங்களிலும் தயாராக உள்ளது. மழை பெய்தால் உணவு வழங்க தயார் நிலையில் உள்ளோம். 

சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது; பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீர் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழையால் ஏற்படும் பாதிப்புக்களை பொதுமக்கள் 9445477205 மற்றும் 9445025819 என்ற எண்களில் தெரிவிக்கலாம்” என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Next Story