தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” ...?


தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” ...?
x
தினத்தந்தி 18 Nov 2021 8:29 AM GMT (Updated: 2021-11-18T15:52:10+05:30)

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், “ சென்னையிலிருந்து 260 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும்.

இதன் காரணமாக, இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும். இது புயலாக மாறும் வாய்ப்பில்லை. தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும். அரபிக் கடலில் இருந்து வீசிய காற்று, காற்றழுத்த தாழ்வுப் பகுதியை நோக்கி நகர்ந்ததன் காரணமாக, நெல்லையில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும்  டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்” என்று அவர் தெரிவித்தார். 

மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக் கூடும். இதன் காரணமாக 

இன்று (18-11-2011) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.

திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

நாளை (19-11-2011) திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 

நாளை மறுநாள் (20-11-2011) கிருஷ்ணகிரி, தருமபுரி ,திருப்பத்தூர் ,ஈரோடு ,கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் ,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகிற 21ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22ம் தேதி வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று தென்மேற்கு வங்கக்கடல் ,தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

நாளை தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Next Story