தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ வாபஸ்


தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ வாபஸ்
x
தினத்தந்தி 19 Nov 2021 2:36 AM GMT (Updated: 19 Nov 2021 2:36 AM GMT)

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களுக்கு நேற்று ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் கரையை கடந்தது. இதனையடுத்து, தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ’ரெட் அலட்ர்’ திரும்பப்பெறப்பட்டது. இது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்,

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கும் 4  மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்னைக்கும் புதுவைக்கும் இடையில் கரையை கடந்தது. தற்போது அது வட தமிழகத்தின் பகுதியின் மேல் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த 'லெட் அலர்ட்’ அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுகிறது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல்பகுதியில் மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மதியம் வரை தொடர்கிறது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதிகபட்சமாக புதுச்சேரியில் 19 செ.மீ, கடலூரில் 14 செ.மீ, ராணிப்பேட்டையில் 11 செ.மீ, திருவண்ணாமலை 10 செ.மீ, சென்னை மீனம்பாக்கம் 5 செ.மீ, நுங்கம்பாக்கம் 4 செ.மீ, கிருஷ்ணகிரி 8 செ.மீ, பாலக்கோடு 6 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்’ என்றார். 

Next Story