பெற்ற மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு 10 ஆண்டு சிறை


பெற்ற மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 19 Nov 2021 6:20 AM GMT (Updated: 19 Nov 2021 6:20 AM GMT)

பெற்ற மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய கீழ் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, 

சென்னையை சேர்ந்த பெண் தனது 15 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளார். தாயின் பிடியில் இருந்து தப்பித்த அந்த சிறுமி திருப்பதிக்கு சென்று பழம் விற்கும் மூதாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளார். அந்த சிறுமி மீது சந்தேகமடைந்த ஆந்திர போலீசார் அவரை மீட்டு சென்னை போலீசில் ஒப்படைத்தனர்.அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு அந்த சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய மற்றும் அந்த சிறுமியை பாலியல் உறவு கொண்டவர் என்று தாய், ஜெயா, லதா, கணேஷ்குமார், சுரேந்தர் என்ற பப்லு, செல்வம் உள்பட பலரை கைதுசெய்தனர்.

இவர்கள் மீது விபசார தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு, சிறுமியின் தாய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஜெயா மற்றும் செல்வம் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. மற்றவர்களை விடுதலை செய்து கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்களும், விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து போலீசாரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.

அப்போது போலீஸ் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “பெற்ற தாயே தனது மைனர் மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். சிறுமி என்று கூட பார்க்காமல், அவரை பாலியல் கொடுமை செய்துள்ளனர். எனவே, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.

இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.வேல்முருகன் தீர்ப்பு அளித்துள்ளார்.

அதில், “இந்த கொடூர சம்பவம் நடைபெறும்போது சிறுமிக்கு 13 முதல் 15 வயதுதான் நடந்துள்ளது. அவர் குற்றவாளிகளுக்கு எதிரான சரியாக சாட்சியம் அளித்துள்ளார். எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியின் தாயார் உள்ளிட்ட 3 பேருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்கிறேன். அதேபோல ஏற்கனவே சிறப்பு கோர்ட்டினால் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story