நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவதோடு, நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கல்லூரி தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று திடீரென்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்திருப்பது, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளையும், பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆன்லைனில் வகுப்புகளை எடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் இருந்த சூழ்நிலையில், தேர்வை மட்டும் நேரடியாக நடத்துவது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்றும், ஆன்லைன் வாயிலாக தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள ஒருவித அச்சம் குறைந்து ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருக்கும் என்றும், எனவே ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. அறவழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அழைத்து பேசாமல் அவர்கள் மீது வழக்குகள் போட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ-மாணவிகளை அழைத்து பேசி, இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தவும், நேரடி வகுப்புகள் முழுமையாக நடைபெற ஆரம்பித்த பிறகு, நேரடித் தேர்வுகள் நடத்தவும், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்லூரிகள் திறந்து சுமார் 2½ மாதங்களே ஆனதாலும், பண்டிகை காலம், பருவமழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே செமஸ்டர் தேர்வுக்கு முன்பு நடத்தப்படும் மாதிரித்தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை பரிசீலித்து போதிய நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், அனைத்து மாணவர்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வருகிறார்களா? என்பதை உறுதி செய்ய இயலாத நிலையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அதன் அடிப்படையில் நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும், மாணவ-மாணவிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story