நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு; மாணவர்கள் மீது போட்ட வழக்குகள் ரத்து: அமைச்சர் அறிவிப்பு


நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு; மாணவர்கள் மீது போட்ட வழக்குகள் ரத்து:  அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 3:15 PM GMT (Updated: 19 Nov 2021 3:15 PM GMT)

தமிழகத்தில் நேரடி தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.  இதனால், ஆன்லைன் வழியே வகுப்புகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், பருவ தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது எனவும், தேர்வுகளை ஆன்லைன் வழியே மட்டுமே நடத்த வேண்டும் எனவும் கூறி மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அனைத்து பல்கலை கழகத்திற்கும் உயர்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில் தமிழக உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் பருவ தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் எனவும், அனைத்து கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று பேசிய அமைச்சர் பொன்முடி, நேரடி தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story