3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு


3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 7:23 PM GMT (Updated: 19 Nov 2021 7:23 PM GMT)

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய, வணிகர் சங்கங்களை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும், போராடிய விவசாயிகளுக்கு பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:-

வேளாண் சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்கமுடியவில்லை என்று தெரிவித்து, 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்காக அ.தி.மு.க. சார்பில் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். இதில் அரசியல் உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிற முடிவை எடுக்க காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த தலைவர் ராகுல்காந்திக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் கருத வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி. விவசாயிகள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகேசன் சக்தியாகும் என்பதை விவசாயிகள் நிருபித்திருக்கிறார்கள். இனிமேல் இந்த மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கின்ற வரையில் மத்திய அரசு கொண்டுவராது என்ற நிலையை விவசாயிகள் ஏற்படுத்திவிட்டார்கள். போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்தையும், மத்திய அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது கடந்த ஓராண்டு காலமாக கடும் குளிர், மழை, வெயில் என்று பாராமல் போராட்டம் நடத்திய ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். வேளாண் சட்டங்களை தொடக்கத்திலேயே மத்திய அரசு திரும்ப பெற்றிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் நேரிட்டிருக்காது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன என்ற செய்தி விவசாயிகளுக்கும், மக்களாட்சிக்கும், நியாயத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மக்கள் சக்திக்கு முன்பு எந்த ஆட்சியும் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். தேர்தல் அச்சம் உலுக்கிவிட்டது. இந்த சட்டங்களை கண்ணை மூடி ஆதரித்த சில கட்சியினரின் கண்கள் இனியாவது திறக்குமா? என்பதே முக்கிய கேள்வியாகும்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன்:-

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி மத்திய அரசை பணிய வைத்த ஜனநாயக சக்திகளுக்கும், உறுதி குறையாது போராடி வந்த விவசாயிகளுக்கும், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து செயல்பட்ட தொழிற்சங்க அமைப்புகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது வரலாறு காணாத ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக நின்ற தொழிலாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் பாராட்டுதல்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் தொடங்கிய நவம்பர் 26-ந்தேதியன்று “விவசாயிகளின் போராட்ட வெற்றி விழாவாக” தமிழகம் முழுவதும் கட்சியின் அமைப்புகள் கொண்டாட வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறப்போவதாக அறிவித்திருப்பது விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. வரலாற்று சிறப்புவாய்ந்த வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய விவசாயிகளை பாராட்டுகிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும், இதர ஜனநாயக சக்திகளும் பாராட்டுக்குரியவர்களாவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்:-

விவசாயிகள் ஓராண்டு காலமாக கடுமையாக எதிர்த்து வந்த மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான முடிவை பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ளது. பிடிவாத போக்கை கைவிட்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் என்பதற்கு ஏற்ப நம்பிக்கை கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு விவசாயம் சார்ந்த அரசு என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

சசிகலா:-

பிரதமர் மோடி நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, குறிப்பாக அனைத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, எந்தவித அரசியல் கவுரவமும் பார்க்காமல், பெருந்தன்மையோடு 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளார். ஒருமித்த கருத்தோடு, ஒன்றிணைந்து போராடிய விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

கொடிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியை தருகிறது. வருங்கால தலைமுறைகள் என்றென்றும் நினைவில் வைத்து போற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள விவசாயிகளுக்கு எனது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா,சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் வலசை ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஜனநாயக ஜனதாதளத்தின் தலைவர் டி.ராஜகோபால், அகில இந்திய விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சத்தியவான் ஆகியோரும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story