முதியவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரூ.2½ லட்சம் திருட்டு வேலைக்கார பெண் கைது


முதியவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரூ.2½ லட்சம் திருட்டு வேலைக்கார பெண் கைது
x
தினத்தந்தி 19 Nov 2021 10:09 PM GMT (Updated: 2021-11-20T13:47:59+05:30)

வீட்டில் தனியாக இருந்த முதியவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரூ.2½ லட்சத்தை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி காந்தி ரோட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). இவர், தன்னுடைய தந்தை மனோகரன் (61), பாட்டி பேபி அம்மாள் (75) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சுப்பம்மாள் (45) சமையல் வேலை செய்து வந்தார்.

சந்தோஷ், கூடுவாஞ்சேரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் சந்தோஷ் வேலைக்கு சென்று விட்டார். அவரது தந்தை மனோகரன், பாட்டி பேபி அம்மாள் ஆகியோர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

ரூ.2½ லட்சம் திருட்டு

வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பி வந்த சந்தோஷ், வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மனோகரன் ஹாலில் இருந்த ஷோபாவிலும், பக்கத்து அறையில் பாட்டி பேபி அம்மாளும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மற்றொரு அறையில் உள்ள பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மாயமாகி இருந்தது. வீட்டில் 2 கைகுட்டை, ஒரு ஜோடி செருப்பு, 3 காலி மதுபாட்டில்கள், சிகரெட் துண்டுகளும் கிடந்தன.

எனவே மர்மநபர்கள் வீடு புகுந்து தந்தை, பாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு பணத்தை திருடிச்சென்று இருக்கலாம் என கருதிய சந்தோஷ், தந்தை, பாட்டி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலைக்கார பெண் கைது

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வேளச்சேரி போலீசாருக்கு, அவரது வீட்டில் சமையல் செய்த சுப்பம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் வீட்டில் தனியாக இருந்த மனோகரன், பேபி அம்மாள் இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளார். இருவரும் மயங்கியதும் பீரோவில் இருந்த ரூ.2½ லட்சத்தை திருடிச்சென்று உள்ளார்.

மேலும் தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும், வெளியாட்கள் வந்து திருடிச்சென்றதுபோல் இருக்கவும் வீட்டுக்குள் மது பாட்டில்கள், கைக்குட்டைகள், சிகரெட் துண்டுகளை போட்டுச்சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து சுப்பம்மாளை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ரூ.2½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்த திருட்டுக்கு அவருடன் வேறு யாரும் உடந்தையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story