வெள்ள நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: சென்னையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்


வெள்ள நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: சென்னையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2021 11:43 PM GMT (Updated: 19 Nov 2021 11:43 PM GMT)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கக்கோரி சென்னையில், பா.ஜ.க. சார்பில் 7 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தென்சென்னை மாவட்ட பா.ஜ.க. தலைவர் காளிதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், (பொறுப்பு), பா.ஜ.க. மாநகர தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே ஆர்.தியாகராஜன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும்.

சென்னை வெள்ள பாதிப்புக்கு தற்போதைய ஆட்சியாளர்கள், கடந்த ஆட்சியை குறை கூறுகிறார்கள். சென்னையை ‘ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றுவதற்கு தியாகராய நகரில் மட்டும் அல்லாமல் 11 வட்டங்களில் பணிகள் நடந்துள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வள்ளுவர் கோட்டம்

இதே போன்று, வள்ளுவர் கோட்டத்தில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கே.விஜய் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

புரசைவாக்கம் வள்ளலார் தெருவில், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வக்கீல் பிரிவு தலைவர் பால்கனகராஜ், பிரசார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story