தேர்தலில் ‘சீட்’ வாங்கி தருவதாக பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி


தேர்தலில் ‘சீட்’ வாங்கி தருவதாக பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 19 Nov 2021 11:49 PM GMT (Updated: 19 Nov 2021 11:49 PM GMT)

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன் தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஸ்குமார் (வயது 29). பா.ஜ.க. பிரமுகரான இவர், சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆரணி சட்டமன்ற தொகுதியில் எனது சித்தப்பா மகள் வசந்தியை வேட்பாளராக நிறுத்த விரும்பினோம். இந்தநிலையில் கட்சிரீதியாக பெரம்பூரை சேர்ந்த விஜயராமன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் மூலம் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமனை சந்தித்தேன். அவர், எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக ரூ.1 கோடி பணம் கேட்டார். முதலில் ரூ.50 லட்சம் தாருங்கள். வேட்பாளர் பட்டியலில் பெயர் வந்ததும் மீதமுள்ள ரூ.50 லட்சம் தாருங்கள் என்று கேட்டார். நானும் முதல் தவணையாக ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால் வேட்பாளர் பட்டியலில் என்னுடைய சகோதரி பெயர் இடம் பெறவில்லை. எனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். இந்த மோசடியில் அவரது தந்தை சிட்டிபாபுவுக்கும் தொடர்பு உண்டு. எனவே நரோத்தமன், சிட்டிபாபு, விஜயராமன் ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஐதராபாத்தில் கைது

இதையடுத்து மத்திய மந்திரி கிஷன் ரெட்டியின் உதவியாளர் பொறுப்பில் இருந்து நரோத்தமன் நீக்கப்பட்டார். இந்த புகார் குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தலைமறைவாக இருந்தனர்.

இந்தநிலையில் நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு ஆகியோர் ஐதராபாத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாண்டிபஜார் தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று நரோத்தமன், சிட்டிபாபுவை கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

Next Story