வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை ‘கிடு கிடு' உயர்வு ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை


வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை ‘கிடு கிடு உயர்வு ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 Nov 2021 9:12 PM GMT (Updated: 21 Nov 2021 9:12 PM GMT)

வரத்து குறைவு எதிரொலியால் தக்காளி விலை ‘கிடு கிடு'வென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தக்காளி விலை விளைச்சல் அதிகமாக இருக்கும் போது ஒரு கிலோ ரூ.5-க்கு கூட விற்பனையான செய்திகள் பல முறை வெளிவந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்து கொண்டே போகிறது.

சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.65 முதல் ரூ.80 வரை விற்பனை ஆன நிலையில், நேற்று முன்தினம் ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சில்லரை விற்பனை கடைக்காரர்கள் ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதன் விலை கிடு கிடுவென உயர்ந்து, ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.40 வரை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை (நவீன் மற்றும் நாட்டு தக்காளி ரகத்துக்கு ஏற்ப) விற்பனை ஆனது.

வரத்து குறைவு

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தான் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிகளில் மழை பெய்த காரணத்தினால் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் அதன் விலை அதிகரித்து இருந்தது. தற்போது ஆந்திராவில் பெருவெள்ளம் வந்ததால், அங்கு தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு, வரத்து மேலும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது' என்றனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 100 லாரிகளில் வந்து கொண்டு இருந்த தக்காளி வரத்து ஏற்கனவே பாதியாக குறைந்திருந்த நிலையில், தற்போது விளைச்சல் பாதிப்பால், அதைவிட குறைவான அளவிலேயே தக்காளி வரத்து இருக்கிறது. ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு வருவதற்கு முன்பு 10 முதல் 15 நாட்களுக்குள் விலை குறையத் தொடங்கிவிடும் என்று வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இப்போது இருக்கும் நிலையை பார்க்கையில், விலை தற்போதைக்கு குறையுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

சில்லரை கடைகளில்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அதை வாங்கி விற்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் அதை விட கூடுதலாகவும் கடைக்காரர்கள் விற்பதை பார்க்க முடிந்தது.

குழம்பு வகைகள் உள்பட சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு தக்காளி அவசியம். அந்த வகையில் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட்டில் தக்காளி கடைசி இடத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் இல்லத்தரசிகள், தற்போது அன்றாட பயன்பாட்டுக்கான தேவைக்கு மட்டும் கிராம் கணக்கில் வாங்குகின்றனர். சிலர் கடைகளுக்கு வந்து விலையை கேட்டு, வாங்காமல் செல்வதும் நடக்க தான் செய்கிறது.

Next Story