அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி


அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2021 9:44 PM GMT (Updated: 21 Nov 2021 9:44 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் பா.ஜ.க.வில் தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.

மாநகராட்சி தேர்தல் பணிக்குழு தலைவரும், சென்னை பெருங்கோட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கூட்டணியில் குழப்பம் இல்லை

இதையடுத்து கே.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட 500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதா?, அதற்கு தகுதியான நபராக உள்ளாரா? என்பதை அறிவதற்காகத்தான் விருப்ப மனு பெறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, எந்த இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் போட்டியிட்டு, அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மற்ற அனைத்தும் முடிவு செய்யப்படும்.

வேளாண் சட்டங்கள்

பிரதமர் மோடியின் பெருந்தன்மையின் காரணமாக வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற காலத்தில் விவசாயிகள் இந்த சட்டத்தை ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடிய சூழல் வரலாம்.

அவ்வாறு, விவசாயிகள் வேண்டும் என்று கேட்டால் இந்த சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை.

பாலியல் குற்றங்கள்

பாலியல் குற்றங்கள் செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மக்களுக்கு புரியவந்தால் குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும். காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story