உயர் அழுத்த மின் கம்பியில் கோளாறு: தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் 40 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு


உயர் அழுத்த மின் கம்பியில் கோளாறு: தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் 40 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 9:47 PM GMT (Updated: 21 Nov 2021 9:47 PM GMT)

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறால், தாம்பரம்- கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை 40 நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை,

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மின்சார ரெயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, ரெயில்வே விதிமுறைகளுக்குட்பட்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை ரெயில்வே கோட்டத்திலும் அனைத்து மின்சார ரெயில்களும் வழக்கமாக இயங்க தொடங்கிவிட்டன.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் குறைவான அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயணிகள் ஞாயிற்றுக்கிழமையும் முழு அளவில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து தெற்கு ரெயில்வேயிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடுவழியில் நிறுத்தம்

மேலும், பராமரிப்பு பணிகள் என காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் அடிக்கடி மின்சார ரெயில்களை ரத்து செய்வதால் பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கமான நாட்களை விட 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என குறைந்த அளவிலே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று மாலை கடற்கரை ரெயில் நிலையம் அருகில் செங்கல்பட்டு, தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் உள்ள உயர் அழுத்த கம்பியில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பயணிகள் கடும் அவதி

இதையடுத்து ரெயில்வே எலெக்ட்ரீக்கல் துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த ஊழியர்கள் உயர் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வெகுநேரமாக மின்சார ரெயில்கள் நடுவழியிலே நின்றதால், விரக்தி அடைந்த பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி பொடி நடையாக நடக்க ஆரம்பித்தனர்.

மின்சார ரெயில் நடுவழியில் நிற்பதற்கான முறையான தகவல்களும் பயணிகளிடம் கூறாததால், சிலர் ரெயில் என்ஜின் டிரைவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறியது.

இந்தநிலையில், 40 நிமிடங்களுக்கு பிறகு உயர் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அப்போது, தண்டவாளத்தில் பொடிநடையாக நடந்து சென்ற சிலர் ரெயிலை மறித்து, மீண்டும் ரெயிலில் ஏறி சென்றதை காண முடிந்தது.

இந்த சம்பவத்தால், தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் 40 நிமிடங்கள் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் வழக்கம் போல மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி குறைவான எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று 40 நிமிடங்களாக மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Next Story