முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை
x
தினத்தந்தி 22 Nov 2021 3:02 AM GMT (Updated: 22 Nov 2021 3:02 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகிறார். 4,335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

திருப்பூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து புறப்பட்டு கார் மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 2.20 மணிக்கு திருப்பூர் வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1,339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்பட 21 துறைகளின் சார்பில் 4 ஆயிரத்து 335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்

மேலும் மின்வாரியத்துறை சார்பில் தெற்கு அவினாசிபாளையம், கே.அய்யம்பாளையம், சின்னேகவுண்டன்பாளையம் துணைமின்நிலையம், புதுராமகிருஷ்ணாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாராபுரம் கால்நடை மருத்துவமனை, பள்ளிக்கட்டிடங்கள் உள்பட ரூ.28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். அதுபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக கொழுமங்குழி ஊராட்சி மன்ற கட்டிடம், மாம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் ஆகியவை ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

விழா முடிந்ததும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவை சென்று சுற்றுலா மாளிகையில் முதல்-அமைச்சர் தங்குகிறார்.

1,200 போலீசார்

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் 1 டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். முதல்-அமைச்சர் காரில் வரும் வழித்தடம் மற்றும் விழா நடக்கும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானம் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

Next Story