ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம்:  சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Nov 2021 12:08 PM GMT (Updated: 22 Nov 2021 12:08 PM GMT)

ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் 'அறம்' அறக்கட்டளையின் தலைவரான உமர் பாருக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த ஆகஸ்டு மாதம் 21ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீட்டிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

கல்வி நிலையங்களை திறந்து நேரடி வகுப்புகளை அரசு அனுமதித்துள்ளபோதும், கட்டாய தடுப்பூசி சுற்றறிக்கையால் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவும் இல்லை என மத்திய அரசோ, மாநில அரசோ உத்தரவாதம் அளிக்காத நிலையில், தடுப்பூசி செலுத்த கட்டயப்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, நீதிபதிகள், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என அவர்கள் தெரிவித்தனர்.

சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன் கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது எனவும் அறிவுறுத்தினர்.  மேலும், தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தியதை சுட்டிக்காட்டி, இந்த வழக்கு பொது நலனுடன் தொடரப்பட்டுள்ளதாக தெரியவில்லை என தெரிவித்தனர்.

இதுதவிர, தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும், மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story