சென்னையில் பரவலாக பெய்த கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது


சென்னையில் பரவலாக பெய்த கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
x
தினத்தந்தி 22 Nov 2021 8:03 PM GMT (Updated: 22 Nov 2021 8:03 PM GMT)

சென்னையில் நேற்று பரவலாக பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

சென்னை,

சென்னையில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவு முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய பெய்த அதி கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அந்த தண்ணீரை அகற்றுவதற்குள் 11-ந்தேதியும் கனமழை கொட்டியது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீர் தேங்கி இருந்தது.

அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் ஈடுபட்டு சரிசெய்தது. இதற்கிடையில் நேற்று காலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக திடீரென்று கன மழை பெய்தது.

தேங்கிய மழைநீர்

குறிப்பாக சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஓட்டேரி, புரசைவாக்கம், பெரம்பூர், பட்டாளம், கிண்டி, கோட்டூர்புரம், அடையாறு, பெருங்குடி, மயிலாப்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி, விருகம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. மேலும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தண்ணீர் தேங்கி இருந்த தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியது.

கே.கே.நகர், தியாகராயநகர், விருகம்பாக்கம் மார்க்கெட் நகர் பகுதி, பட்டாளம் உள்பட சில இடங்களில் குளம்போல் தண்ணீர் கிடந்தது. இதனால் அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அந்த பகுதிகளை கடந்து சென்றனர். சென்னையில் நேற்று காலை மழை பெய்தாலும், பிற்பகலில் வெயில் அடித்தது.

போக்குவரத்து நெரிசல்

சென்னையில் உள்ள புரசைவாக்கம் தாணா தெரு உள்பட பிரதான சாலைகளில் மழைநீர் வடிய இடமின்றி தேங்கியது. இதனால் வாகனங்கள் அந்த சாலைகளை மெதுவாகவே கடந்து செல்ல முடிந்தது. வாகனங்களின் இயக்கம் மெதுவாக இருந்ததால் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று பள்ளி மாணவ-மாணவிகளின் வாகனம், வேலைக்கு செல்பவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. காலையில் தொடங்கிய போக்குவரத்து நெரிசலின் தாக்கம் பிற்பகல் வரையிலும் நீடித்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

Next Story