மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் ஐகோர்ட்டு கருத்து


மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 22 Nov 2021 11:12 PM GMT (Updated: 22 Nov 2021 11:12 PM GMT)

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் நல்லது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர, யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள், மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

கட்டாயப்படுத்தக்கூடாது

கல்வி நிலையங்களை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது, இந்த சுற்றறிக்கையால் தடுப்பூசி போடாத மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என மத்திய அரசோ, மாநில அரசோ உத்தரவாதம் அளிக்காத நிலையில், தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் நலன்

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மாணவர்கள் நலன் கருதி கொரோனா தடுப்பூசியை ஆசிரியர்கள் போட்டுக்கொண்டால் நல்லது. சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது. தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தியுள்ளது.

தற்போது 2 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் இதற்கு மாற்று கூட வர வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு பொது நலனுடன் தொடரப்பட்டுள்ளதாக தெரியவில்லை" என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story