தமிழ்நாட்டை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாட்டை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2021 12:23 AM GMT (Updated: 23 Nov 2021 12:23 AM GMT)

அதிகம் பேசமாட்டோம், செயலில் காட்டுவோம். இந்தியாவில் தமிழ்நாட்டை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் சென்றார்.

அங்கு அவரை அமைச்சர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

பொதுமக்கள் வரவேற்பு

பின்னர் முதல்-அமைச்சர் கார் மூலம் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானத்திற்கு வந்தார். அவருக்கு கோவை விமான நிலையம் முதல் வ.உ.சி. மைதானம் வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவினாசி ரோட்டில் பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழுங்க வரவேற்பு அளித்தனர்.

வ.உ.சி. மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரூ.89 கோடியே 73 லட்சம் செலவில் 128 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.587 கோடியே 91 லட்சம் செலவில் முடிவுற்ற 70 திட்ட பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், ரூ.646 கோடியே 61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 25 ஆயிரத்து 321 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாநாடுபோல் விழா

கோவை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வர 2½ மணி நேரமாகி விட்டது. தாய்மார்கள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் சாலையின் இருபுறமும் நின்று வரவேற்றதால் குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை.

கோவையில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி என்னிடம் சொன்னார். ஆனால் இங்கு மாநாடு போல் விழா நடைபெறுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நான் நினைத்த அளவிற்கு வெற்றிபெற முடியவில்லை. அதையெல்லாம் இங்கு பேசி அரசியல் ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை. காரணம் இது அரசு விழா.

நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வோடு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் அல்ல. எங்களுக்கு ஓட்டு போட தவறியவர்களுக்கும் சேர்த்து நாங்கள் பணியாற்றுவோம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

நிச்சயம் நடவடிக்கை

அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என்ற உணர்வோடு நான் பணியாற்றி வருகிறேன்.

தி.மு.க. அரசை பொறுத்தவரைக்கும் மனு ஒன்று கொடுத்தால், அதன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். தேர்தலுக்கு முன்பாக வாங்கிய மனுக்கள் பெட்டியை ஸ்டாலினால் திறக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் கருணாநிதியின் தாரக மந்திரத்தை எங்கள் மனதில் பதிய வைத்து, சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம்.

சிறந்த மாவட்டமாக்க உறுதி

ஆட்சி அமைந்த அன்றே உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற தனித்துறை அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீங்கள் மக்களிடம் கேட்டால், ஸ்டாலினிடம் மனு கொடுத்தேன், 100 நாட்களில் அவர் தீர்த்து வைத்து விட்டார் என்று ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக, அனைத்து உட்கட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக மாற்ற உறுதி எடுத்திருக்கிறோம்.

முதன்மையான மாநிலம்

இந்தியாவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியாவின் முதல் தொழில் முகவரியாக தமிழ்நாடு மாற வேண்டும். நாளை (இன்று) கோவையில் தொழில் அதி பர்கள் மாநாடு நடக்கிறது. அதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திட இருக்கிறோம். கோடிக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளது. அதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக இருக்கிறது. இதுபோன்ற தொழில் அமைப்புகளின் மாநாடுகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றன.

தொழில் துறையை வளர்ப்பதன் மூலமாக மக்களை வளர்க்க முடியும். மக்களது வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி காட்டுவோம். அப்படி மாற்றுகிற நேரத்தில் அதில் முதலிடம் கோவைக்கு உண்டு என்பதை பெருமையுடன் நான் சொல்ல விரும்புகிறேன்.

அதிகம் பேசமாட்டேன்

நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். செயலில் என்னுடைய பணிகள் இருக்கும். பேச்சை குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்டு என்ற பழமொழிக்கேற்ப நிச்சயமாக இந்த மாவட்டம் தமிழகத்திலேயே தலை சிறந்த மாவட்டமாக, எல்லாவற்றிலும் தலை சிறந்த மாவட்டமாக இருக்கிறது என்ற அந்த பெருமையை பெறுவதற்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம். அப்படி ஆற்றக்கூடிய பணிகளுக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், ஆதரவு தர வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ரூ.1,888 கோடி திட்டங்கள்

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் செம்மொழி பூங்கா, புதிய பாதாள சாக்கடை திட்டம், 5 திட்ட சாலைகள் உள்பட ரூ.1,888 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தார்.

திருப்பூரிலும் அரசு விழா

கோவையில் விழா முடிந்ததும் கார் மூலமாக மு.க.ஸ்டாலின் திருப்பூர் வந்தார். அங்குள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான 2 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.28 கோடியே 17 லட்சம் செலவில் முடிவுற்ற 20 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் ரூ.55 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4 ஆயிரத்து 335 பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

அப்போது அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே ஈராண்டு சாதனைகளை செய்துள்ளது என்று தெரிவித்தார்.

ஹேஸ்டேக்

மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் ‘கோ பேக்’ ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் பதிவிட்டனர்.

இதையடுத்து சில நிமிடங்களில் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக ‘‘கோவை வெல்கம் ஸ்டாலின்’’ என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டது. அதை வரவேற்று ஏராளமானோர் பதிவிட்டனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story