“போலீசார் தங்கள் உயிரை பாதுகாக்க துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக்கூடாது” - டி.ஜி.பி.சைலேந்திர பாபு


“போலீசார் தங்கள் உயிரை பாதுகாக்க துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக்கூடாது” - டி.ஜி.பி.சைலேந்திர பாபு
x
தினத்தந்தி 23 Nov 2021 5:51 AM GMT (Updated: 23 Nov 2021 6:37 AM GMT)

மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன் கடந்த 21-ம் தேதி அன்று ஆடு திருடும் கும்பலை பிடிக்க முயன்றபோது, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைதொடரந்து, தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், நேற்று அதிகாலை 4 மணியளவில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு  மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், பூமிநாதனின் மனைவி மற்றும் மகனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது;-

“வீர மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு காவல்துறை வீர வணக்கம் செலுத்துகிறது. அவரது இழப்பு பெரிய இழப்பாகும். பூமிநாதன் ஏற்கனவே முதல்-அமைச்சரிடம் பதக்கம் வாங்கியவர். தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற சிறந்த வீரர். கடமை உணர்வுடன், வீரத்துடனும், விவேகத்துடனும் வேலைப்பார்த்தவர். ஆடு திருடும் கும்பல் தானே என்று அவர் சாதாரணமாக விட்டுவிடவில்லை. 15 கி.மீ., தூரம் துரத்திச் சென்று மூன்று பேரையும் மடக்கி பிடித்து, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளார்.
 
மேலும், குற்றவாளிகளின் பெற்றோருக்கு போன் செய்து அவர்கள் செய்த குற்றத்தை தெரிவித்து அறிவுரையும் வழங்கி உள்ளார். சட்ட விதிப்படி அவர் நடந்து கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு பூமிநாதனை கொலை செய்துள்ளனர்.

காவல்துறை மீதான தாக்குதல் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். அதனால், ரோந்துப் பணியின்போதோ அல்லது தனியாக செல்லும்போதோ 6 தோட்டாக்களுடன் துப்பாக்கியை எடுத்துச்செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். சட்டப்படி போலீசார் தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்கக்கூடாது. வீடியோ உள்பட 100 சதவீத ஆதாரம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை அவசியமில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story