முதல்-அமைச்சர் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


முதல்-அமைச்சர் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 23 Nov 2021 7:48 AM GMT (Updated: 23 Nov 2021 7:48 AM GMT)

கோவையில் நடைபெற்று வரும் ‘தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோவை: 

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்த விழாவில், 587.91 கோடி ரூபாய்க்கு முடிவுற்ற, 70 திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்புக்கு, 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின், 25 ஆயிரத்து, 123 பயனாளிகளுக்கு, 646.61 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.

முதலீட்டாளர் மாநாட்டுக்கு முன்னதாக, விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்கள் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் தலைமையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. 10 புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ. 52,543 கோடி மதிப்பிலான பணிகள், திட்டங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. 

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு செயலர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத் தலைவர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

13,500 கோடி மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வான்வெளி, பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. 485 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் நிறுவனம் மூலம்1960 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு நிதிநுட்பக்கொள்கை, தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் 2.O-வின் கைப்பேசி செயலி ஆகியவையும் இன்றைய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

Next Story