தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்கு திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது


தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்கு திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 23 Nov 2021 1:54 PM GMT (Updated: 24 Nov 2021 9:46 AM GMT)

தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்கு திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது

தூத்துக்குடி:
நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
மேலடுக்கு சுழற்சி
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலை முதல் மதியம் வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மதியத்துக்கு பிறகு சிறிது நேரம் லேசான வெயில் அடித்தது. மாலையில் மீண்டும் மழை பெய்தது. சாயர்புரம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
கடற்கரை தடுப்பு சுவர் இடிந்தது
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை மழை கொட்டியது. இதனால் திருச்செந்தூர் நகர பகுதியில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது.
மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிழக்குப் பகுதியில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி கடற்கரையோரம் காங்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருச்செந்தூரில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக கோவிலின் வடகிழக்கு பகுதியில் சுமார் 20 மீட்டர் தூரம் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட காங்கிரீட் தடுப்பு சுவர் இடிந்து கடலில் விழுந்தது. 
பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் கோவில் தனியார் பாதுகாவலர்கள் அப்பகுதியில் பக்தர்கள் செல்லாதவாறு தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக அந்த பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதே பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி கிரிபிரகாரம் மேல்தட்டு இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கோவில்பட்டியில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 9.6 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 7 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
நெல்லை
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதலே ஒரு சில இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மாதேவியில் 8 மில்லி மீட்டர் மழை பதிவானது. மணிமுத்தாறு அணை பகுதியில் 7.5 மில்லி மீட்டரும், அம்பையில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவானது. 
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சேரன்மாதேவி, அம்பை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
குடைபிடித்து சென்றனர்
நெல்லை மாநகர பகுதியான நெல்லை சந்திப்பு, டவுன், தச்சநல்லூர் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 11 மணி முதல் சாரல் மழை போல் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
இந்த மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லுபவா்கள் குடை பிடித்தபடி சென்றனர். மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.
தென்காசி
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது.

Next Story