மதுரை ஐகோர்ட்டை சுற்றி தேங்கிய மழைநீரை அகற்ற கூறியும் நடவடிக்கை இல்லை


மதுரை ஐகோர்ட்டை சுற்றி தேங்கிய மழைநீரை அகற்ற கூறியும் நடவடிக்கை இல்லை
x
தினத்தந்தி 23 Nov 2021 8:15 PM GMT (Updated: 23 Nov 2021 8:15 PM GMT)

மதுரை ஐகோர்ட்டை சுற்றிலும் தேங்கிய மழைநீரை அகற்றும்படி தெரிவித்தும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை,

மதுரை புதுத்தாமரைப்பட்டி பகுதியில் பெரியாறு-வைகை பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தினர் கட்டியுள்ள குடியிருப்பு சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட கோரி புதுத்தாமரைப்பட்டி சேர்ந்த ராமேசுவரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, பெரியாறு-வைகை பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு சம்பந்தமான புகைப்படங்களையும், வருவாய் ஆவணங்களையும் தாக்கல் செய்தார். அவற்றை பார்த்த நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பின்னர், “கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா?” என்று கேள்வி எழுப்பினர்.

பொதுமக்களின் நிலை என்ன?

மேலும், மதுரை ஐகோர்ட்டை சுற்றிலும் கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் செல்ல வழி இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் தெரிவித்தோம். போனில் தொடர்பு கொண்டும் இந்த பகுதியை கவனத்தில் கொள்ளுமாறு தெரிவித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

நீதிபதிகளான நாங்கள் தெரிவித்த போதும் கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? என்பது தெளிவாகிறது. கொரோனா போன்ற தொற்று நோய்களை தேடி செல்ல வேண்டாம். இங்கேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் கூறிய நீதிபதிகள் மீண்டும் அதிருப்தி தெரிவித்தனர்.

கலெக்டர் ஆஜராக நேரிடும்

விசாரணை முடிவில், மனுதாரர் பகுதியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பை 2 வாரத்தில் அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் ஆஜராக நேரிடும் என அரசு வக்கீலிடம் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Next Story