மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர்


மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:15 PM GMT (Updated: 23 Nov 2021 10:15 PM GMT)

திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள், கணினி வகுப்பறை உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் மாணவர்களோடு மாணவர்களாய் தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் படிப்பதை ரசித்து பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வகம் திறப்பு

இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

சுழற்சி முறை வகுப்புகள் தொடரும்

சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுழற்சி முறை வகுப்புகள் அடிப்படையில் தான் வரவழைக்கப்படுகின்றனர். அதனை இப்போது நிறுத்த முடியாது. கொரோனா தொற்று முழுவதும் குறைந்தவுடன் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்' என்றார்.

Next Story