மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு + "||" + Chance of heavy rain in Tamil Nadu for the first 3 days tomorrow

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
இலங்கை அருகே புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாள் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் திடீரென பெய்த கன மழையால் நகரம் மீண்டும் தண்ணீரில் தத்தளித்தது. பல்வேறு இடங்களில் மழை நீர் வடிய இடமின்றி தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


சென்னையில், மழைக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி நேற்று பிற்பகல் வரையிலும் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை அருகே உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெற்கு வங்க கடல்பகுதியில் (5.8 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 24-ந் தேதி (இன்று) திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 25-ந் தேதி (நாளை) காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் கனமழை

26-ந் தேதி, 27-ந் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். இலங்கையை ஒட்டிய பகுதியில்தான் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகப்போகிறது. இது புயலாக வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

சென்னையில் 66 சதவீதம் அதிக மழை

கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் 23-ந் தேதி (நேற்று) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பாக 325.9 மி.மீ. மழை பதிவாகவேண்டும். ஆனால் 535.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விடவும் 64 சதவீதம் அதிகம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் சென்னையில் 555.4 மி.மீ. மழை இயல்பாக பதிவாகவேண்டும். ஆனால் 923 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பான மழை அளவை விடவும் 66 சதவீதம் அதிகம் ஆகும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ந் தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

செங்குன்றத்தில் 7 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம், சோழவரம், பந்தலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக காமாட்சிபுரம், தேவாலா, சிவகிரி, உடுமலைப்பேட்டையில் தலா 5 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், எழிலகம், கூடலூர் பஜார், அவினாசி, கோவிலங்குளம், ஓமலூர், மேல் கூடலூரில் தலா 4 செ.மீ., அயனாவரம், தண்டையார்பேட்டை, திருப்பத்தூர், துவாக்குடி, தண்டாரம்பேட்டை, பவானிசாகர், தூத்துக்குடி விமான நிலையம், கோபிச்செட்டிப்பாளையம், திருக்காட்டுப்பள்ளி, மூங்கில்துறைப்பட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதன் பின் வலுப்பெறும் புயல் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை (சனிக்கிழமை) கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக: மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.