கோர்ட்டு உத்தரவை மீறி பத்திரப்பதிவு செய்தவருக்கு 3 மாத சிறை ஐகோர்ட்டு அதிரடி


கோர்ட்டு உத்தரவை மீறி பத்திரப்பதிவு செய்தவருக்கு 3 மாத சிறை ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 24 Nov 2021 12:04 AM GMT (Updated: 24 Nov 2021 12:04 AM GMT)

கோர்ட்டு உத்தரவை மீறி பத்திரப்பதிவு செய்தவருக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 3 மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை தசரதபுரம் தேவராஜ்நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கும், சின்னாதாஸ், செல்வராஜ் உள்ளிட்ட 5 பேருக்கும் சொத்துப் பிரச்சினை உள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சொத்து தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நாகராஜுக்கு அனுப்பப்பட்டு, அவரும் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை மீறி, வழக்கு தொடர்பான 300 சதுர அடி நிலத்தை வெங்கடராமன் என்பவருக்கு 2018-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

உத்தரவாதம்

இதை அறிந்த சின்னாதாஸ் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் நாகராஜுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விற்பனை செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யும்படி உத்தரவிட்டது.

நாகராஜும் கோர்ட்டில் ஆஜராகி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 4 பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் ரத்து செய்யாமலும், விசாரணைக்கு நேரில் வராமலும் இழுத்தடித்தார். அதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

3 மாதம் சிறை

அதன்படி ஆஜரான அவர், பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதாக மீண்டும் உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாகராஜ் ஆஜராகாததால் அவருக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நாகராஜை பிடித்து ஐகோர்ட்டில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஆஜர்படுத்தினார்.

அப்போதும் பத்திரப்பதிவை ரத்து செய்ய நாகராஜ் கால அவகாசம் கேட்டார். அதையடுத்து கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி சுப்பிரமணியம், ‘இந்த ஐகோர்ட்டு பலமுறை அவகாசம் அளித்தும், அதற்கு நாகராஜ் மதிப்பு அளிக்கவில்லை. எனவே அவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

ரத்து

மேலும், ‘அந்த பத்திரப்பதிவையும், கட்டுமான ஒப்பந்த பதிவுகளையும் வேளச்சேரி சார்பதிவாளர் 2 வாரத்துக்குள் ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து நாகராஜ் சிறைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

Next Story