சேலத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி 6 வீடுகள் தரைமட்டம்


சேலத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி 6 வீடுகள் தரைமட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2021 12:10 AM GMT (Updated: 24 Nov 2021 12:10 AM GMT)

சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

சேலம்,

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 3-வது தெருவில் வசித்து வந்தவர் பத்மநாபன் (வயது 49). இவர் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி தேவி (38). அவர்களுடைய மகன் லோகேஷ் (18).

பத்மநாபன் வீட்டையொட்டி வெங்கட்ராஜன் (62) என்பவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் தளத்தில் கோபி (58) என்பவர் தனது தாய் ராஜலட்சுமி (80), மாமியார் எல்லம்மாள் (90) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

முதல் மாடியில் முருகன் (46) என்பவர் தனது மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம் (18), மகள் பூஜா ஸ்ரீ (10) ஆகியோருடன் வசித்து வருகிறார். முருகன் வீட்டையொட்டி ஜவுளி வியாபாரியான கணேசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டையொட்டி மோகன்ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் கோபியின் வீட்டில் அவரது தாய் ராஜலட்சுமி காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கண்இமைக்கும் நேரத்தில் கோபி, பத்மநாபன், முருகன், கணேசன், வெங்கட்ராஜன் மோகன்ராஜ் ஆகியோர் வசித்து வந்த 6 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இடிபாடுகளுக்குள் சிக்கினர்

இதில் 6 வீடுகளிலும் வசித்து வந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், வாழப்பாடி ஆகிய இடங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மூதாட்டி பலி

இதையடுத்து தீயில் கருகி படுகாயம் அடைந்த கோபி, இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த கோபியின் தாய் ராஜலட்சுமி, கணேசன், அவருடைய மகன் சுதர்சன், தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மநாபனின் மகன் லோகேஷ், முருகன், உஷாராணி, வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராஜன், அவருடைய மனைவி இந்திராணி (54), மோகன்ராஜ், நாகசுதா, கோபால் (70), தனலட்சுமி (64) ஆகிய 13 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் மூதாட்டி ராஜலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இடிபாடுகளுக்குள் பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, முருகனின் மகன் கார்த்திக்ராம், மகள் பூஜாஸ்ரீ ஆகியோர் சிக்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களில் சிறுமி பூஜா ஸ்ரீயின் அழுகுரல் மட்டும் கேட்டது.

பொக்லைன் வாகனங்கள்

இதைத்தொடர்ந்து 2 பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. காலை 11.55 மணி அளவில் சிறுமி பூஜா ஸ்ரீயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தீயணைப்பு வீரர்கள் தெர்மல் இமெஜ் என்ற நவீன கேமராவை கட்டிட இடிபாடுகளுக்குள் செலுத்தி சோதித்தனர். மேலும் பத்மநாபனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவர் வைத்திருந்த செல்போன் ரிங்டோன் மூலம் எங்கு சிக்கி உள்ளார்? என்பதை அறிந்தனர். அந்த சத்தத்தை வைத்து அங்கிருந்த சுவர் அகற்றப்பட்டது.

4 பேர் பிணமாக மீட்பு

இதையடுத்து சுமார் 6½ மணி நேரத்துக்கு பிறகு தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபன், அவரது மனைவி தேவி, முருகனின் மகன் கார்த்திக்ராம், கோபியின் மாமியார் எல்லம்மாள் ஆகியோரை இடிபாடுகளில் இருந்து தீயணைப்பு படையினர் பிணமாக மீட்டனர். இதில் எல்லம்மாளின் கால் துண்டாகி இருந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் மூலம் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்த கோர விபத்து தொடர்பாக சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story