பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் சட்டசபையை முற்றுகை போலீசாருடன் மோதலால் பரபரப்பு


பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள்  சட்டசபையை முற்றுகை போலீசாருடன் மோதலால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 3:14 PM GMT (Updated: 24 Nov 2021 3:14 PM GMT)

சட்டசபையை முற்றுகையிட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி
சட்டசபையை முற்றுகையிட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.10 ஆயிரம் சம்பளம்

புதுவை பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தற்போது ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக சம்பளம் பெற்று வருகின்றனர். 
கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசுத்துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பான கோப்பு தலைமை செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் அந்த கோப்பில் தலைமை செயலாளர் கையெழுத்திடவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வவுச்சர் ஊழியர்கள் அடங்கிய அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் தலைமை செயலாளரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவரிடம் சம்பளம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதன்பிறகும் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவில்லை.

சட்டசபை முற்றுகை

இந்தநிலையில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேச அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் அதன் தலைவர் சரவணன் தலைமையில் சட்டசபைக்கு திரண்டு வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் இல்லாததால் வவுச்சர் ஊழியர்களை சபை காவலர்கள் சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் சட்டசபை நுழைவு வாயில் இரும்பு கதவை இழுத்து மூடினர்.
இதைத்தொடர்ந்து சட்டசபையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலைந்து போகுமாறும், முதல்-அமைச்சர் வந்ததும் அவரை பார்க்க அனுமதிப்பதாக கூறினார்கள். ஆனால் அதை ஏற்க ஊழியர்கள் மறுத்தனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தள்ளிக்கொள்ளும் சூழ்நிலையும் உருவானது. ஒருவழியாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
இதற்கிடையே பொதுப்பணித்துறை அமைச்சரான லட்சுமிநாராயணன் சட்டசபைக்கு வந்தார். அவரை நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். அப்போது ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க அடுத்த மாதம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story