புதுவை தலைமை செயலாளருடன் எம் எல் ஏ க்கள் வாக்குவாதம்


புதுவை தலைமை செயலாளருடன்  எம் எல் ஏ க்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 24 Nov 2021 3:59 PM GMT (Updated: 24 Nov 2021 3:59 PM GMT)

மக்கள்நல திட்டங்கள் தொடர்பாக புதுவை தலைமை செயலாளருடன் எம்.எல்.ஏ.க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி
மக்கள்நல திட்டங்கள் தொடர்பாக புதுவை தலைமை செயலாளருடன் எம்.எல்.ஏ.க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அறிவிப்பாகவே உள்ளது

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் அவை இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.
குறிப்பாக 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவது, அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்குவது, தீபாவளி இலவச பொருட்கள் வழங்குவது, நிவாரண உதவி என அனைத்தும் அறிவிப்புகளாகவே உள்ளன. இதனால் அரசின் அறிவிப்புகள் செயல்வடிவம் பெறுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைமை செயலாளருடன் சந்திப்பு

தங்கள் தொகுதி எம்.எல். ஏ.க்களை தொடர்புகொண்டு நலத்திட்டங்கள், நிவாரணம் தொடர்பாக அவர்கள்கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் உரிய பதிலை எம்.எல்.ஏ.க்களால் கொடுக்க முடியவில்லை.
இந்தநிலையில்  என்.ஆர்.காங்கிரஸ்,    பா.ஜ.க., காங்கிரஸ்      மற்றும்    சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நேரு, வைத்தியநாதன், கல்யாணசுந்தரம்,       ஜான்குமார், ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர்,   பிரகாஷ்குமார், ரிச்சர்ட் ஆகியோர் நேற்று தலைமை    செயலாளரை அவரது     அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

வாக்குவாதம்

அப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படாதது குறித்து தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர்களுக்கு தலைமை செயலாளர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரின் அறையைவிட்டு வெளியேறினார்கள்.
இந்த    சந்திப்பினை தொடர்ந்து நேரு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

பணி செய்யவில்லை

புதிய அரசு அமைந்து 6 மாதம் ஆகிறது. இதில் 3 மாதங்கள் கொரோனாவில் போய்விட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பால் 2 மாதங்கள் ஓடிவிட்டது. கடந்த ஒரு மாதமாக தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்கள் அவர்களது பணியை சரிவர செய்யவில்லை.
இந்த   மழைக்காலத்தில் புதுவையில் உள்ள 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து பணி செய்திருந்தால்கூட பாதிப்புகளை குறைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ரூ.20 கோடி சேதம்

நேற்று முன்தினம் பிப்மேட்டில் அதிகாரிகளை சந்தித்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கேட்டோம். ஆனால் பள்ளிகள் முழுமையாக தொடங்கியபின் ஆசிரியர்கள் தேர்வு செய்வது தொடர்பாக பார்க்கலாம் என்று கூறி கோப்புகளை திருப்பி அனுப்பி உள்ளனர். இதேபோல் மக்கள் நலத்திட்டங்களுக்கான பல்வேறு கோப்புகளை அரசு செயலாளர்கள்   திருப்பி அனுப்பி உள்ளனர்.
மழைக்காலத்தில்   ஒவ்வொரு வீட்டிலும் ரூ.50 ஆயிரம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தலைமை செயலாளரும், கலெக்டரும் புதுச்சேரியில் ரூ.14 முதல் 20 கோடி வரைதான் சேதம் என்று அறிக்கை கொடுத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் யாரும் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தை வந்து பார்த்ததுகூட இல்லை.
இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. கூறினார்.

முற்றுகையிடுவோம் 

கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.    கூறுகையில், புதுவை அரசு செயலாளர்கள் யாரும் மக்கள்   நல திட்டங்களில் அக்கறை செலுத்தவில்லை. நாங்கள் சொன்ன பிரச்சினைகளை இன்னும் சில நாட்களில சரிசெய்யாவிட்டால் தலைமை    செயலகத்தை முற்றுகையிடுவோம். அடுத்ததாக கவர்னர் மாளிகை, நாடாளுமன்றத்தையும் முற்றுகையிடுவோம். இதில் கட்சி வித்தியாசம்   பார்க்கமாட்டோம்.   மக்கள் நலனுக்கு எதிராக  இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள்     அவர்களுக்கு   எதிராக   போராடுவோம் என்றார்.

Next Story