ஈஷா மையத்துக்கு புதிய நோட்டீசை அனுப்பி சட்டப்படி விசாரணை குழந்தைகள் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஈஷா மையத்துக்கு புதிய நோட்டீசை அனுப்பி சட்டப்படி விசாரணை குழந்தைகள் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2021 6:56 PM GMT (Updated: 24 Nov 2021 6:56 PM GMT)

ஈஷா யோகா மையத்துக்கு புதிய நோட்டீசை அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்தும்படி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நிர்வாகி சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘சத்குரு ஜக்கி வாசுதேவ் 1992-ம் ஆண்டு ஈஷா பவுண்டேசனை உருவாக்கினார். இந்த அமைப்பின் சார்பில், சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் 9 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஈஷா யோகா மையத்தில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு குருகுல முறையில் ஆங்கிலம், கணிதம் மற்றும் வேத பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன’.

‘பள்ளிக்குழந்தைகள் தொடர்பாக தாமாக முன்வந்து புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஈஷா யோகா மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ஆவணங்களுடன் நாங்கள் சென்றால், அதிகாரிகள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்து, அதன் அடிப்படையில் செயல்படுகின்றனர். திறந்த மனநிலையில் விசாரணையை நடத்துவது இல்லை. எனவே, கடந்த 2016-ம் ஆண்டு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

அதிகாரம் உள்ளது

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இவ்வாறு நோட்டீஸ் அனுப்ப குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. சட்டப்படிதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு ஏதாவது அநீதி நடந்தால், அதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இந்த நோட்டீஸ் சட்டப்படிதான் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விசாரணையை எதிர்கொள்ளாமல் மனுதாரர் ஆரம்பகட்டத்திலேயே ஐகோர்ட்டை நாடியுள்ளார்.

சட்டப்படி விசாரணை

எனவே, விசாரணைக்கு வரும்படி மனுதாரர் அமைப்புக்கு ஆணையம் 4 வாரத்துக்குள் மீண்டும் புதிய நோட்டீசை அனுப்ப வேண்டும். அந்த நோட்டீஸ் கிடைத்த நாளில் இருந்து 2 வாரத்துக்குள் மனுதாரர் அமைப்பு உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு முடிவுக்கு அதிகாரிகள் வந்து செயல்படுகின்றனர் என்று மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுவதால், அவர்களுக்கு உரிய வாய்ப்பு அளித்து சட்டப்படி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story