சிவில் சர்வீசஸ் தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 19 பேர் வெற்றி


சிவில் சர்வீசஸ் தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 19 பேர் வெற்றி
x
தினத்தந்தி 24 Nov 2021 9:16 PM GMT (Updated: 24 Nov 2021 9:16 PM GMT)

சிவில் சர்வீசஸ் தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 19 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைவராக கொண்டு மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டது. சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது.

மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்பட மத்திய-மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இதுவரை 3 ஆயிரத்து 582 பேர் வெற்றி பெற்று தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். அந்தவகையில், 2020-21 ஆண்டுக்காக மொத்தம் 796 காலிப்பணி இடங்களை நிரப்பும் வகையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி வெளியானது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தகுதியுள்ள மாணவ-மாணவிகள் மனிதநேய மையத்தில் சேர்க்கப்பட்டனர். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மாணவ-மாணவிகளுக்கு வசதி

மாணவ-மாணவிகள் தங்குவதற்காக அடிப்படை வசதிகளுடன், முழு பாதுகாப்புடன் கூடிய தனித்தனி வீடுகள், ஆரோக்கியமான, தரமான உணவு மற்றும் குடிநீர் வசதி, சிறந்த பயிற்றுனர்களை கொண்டு முழுநேர பயிற்சி வகுப்புகள் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாடு குறித்து நேரடி கவனமும் செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந்தேதி நடத்தப்பட்டது.

இந்த தேர்வின் முடிவு அதே மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலையான முதன்மை தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு, நேரடி வகுப்புகள் நடைபெறாததால், அதற்கு பதிலாக தேவையான அறிவுரைகளும், பாடத்திட்டங்களும் மனிதநேய இலவச பயிற்சி மையம் மூலம் வழங்கப்பட்டது.

நூலக வசதி, தேர்வுகள் நடைபெற்ற நாட்களில் தேர்வு மையத்துக்கு சென்று வர வாகன வசதி, குடிநீர், சத்தான மதிய உணவு ஆகியவையும் வழங்கப்பட்டது.

இணைய வழி பயிற்சி

கடந்த ஜனவரி மாதம் 8, 9, 10, 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடந்த முதன்மை தேர்வின் முடிவு கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இறுதித்தேர்வான நேர்முகத்தேர்வு டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் கடந்த செப்டம்பர் 23-ந்தேதி வரை நடந்தது.

இதில் திறம்பட பங்கேற்பதற்காக மனித நேய மையத்தில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு, ஓய்வு பெற்ற அதிகாரிகள், சிறந்த பயிற்றுனர்களின் மூலமாக தினந்தோறும் இணைய வழியாக மாதிரி நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு பயணப்படியும் வழங்கப்பட்டது.

வாழ்த்து

டெல்லியில் நடைபெற்ற நேர்முகத்தேர்வின் முடிவுகள் செப்டம்பர் 24-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் மனிதநேய மையத்தின் மூலமாக நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்களில் 8 மாணவிகள், 11 மாணவர்கள் என 19 பேர் வெற்றி பெற்றனர். கோவையை சேர்ந்த வி.எஸ்.நாராயண சர்மா, ஏ.கேத்தரின் சரண்யா, ஆர்.ஏ.பிரியங்கா, எஸ்.கோபில்லா வித்யாத்தரி மற்றும் கே.பிரதீப் ஆகிய 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு பணியாளர் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்ற 19 பேரில் 17 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி, ஒருவருக்கு இந்திய அயலக பணி, 5 பேருக்கு ஐ.பி.எஸ். பணி, 4 பேருக்கு இந்திய வருவாய் பணி (வருமான வரித்துறை), ஒருவருக்கு இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்), 2 பேருக்கு தபால் துறை, ஒருவருக்கு இந்திய தகவல் சேவை பிரிவும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2 பேருக்கு இன்னும் பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைவருக்கும் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Next Story