டாக்டர்கள் பரிந்துரை இன்றி: நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை கடைகளில் வாங்க வேண்டாம்


டாக்டர்கள் பரிந்துரை இன்றி: நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை கடைகளில் வாங்க வேண்டாம்
x
தினத்தந்தி 24 Nov 2021 10:17 PM GMT (Updated: 24 Nov 2021 10:17 PM GMT)

டாக்டர்கள் பரிந்துரை இன்றி நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை கடைகளில் வாங்க வேண்டாம் என சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

உலக நுண்ணுயிர் கொல்லி மருந்து விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 18-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கடைசி நாளான நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘உலக நுண்ணுயிர் கொல்லி மருந்து விழிப்புணர்வு வாரம்’ ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

துணை டீன் டாக்டர் விஜய் சதீஷ்குமார், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் தேவசேனா மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நுண்ணுயிர் கொல்லி மருந்து விழிப்புணர்வு வாரத்துக்கான நிறம் நீலம் என்பதால், நீல நிற விளக்குகளை ஒளிர செய்தும், நீல நிறை ஆடைகள் அணிந்தும் டாக்டர்கள் விழிப்புணர்வை அனுசரித்தனர்.

நிகழ்ச்சியின்போது, நுண்ணுயிர் கொல்லி மருந்தினை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு குறித்து மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-

தவிர்க்க வேண்டும்

தவறான, முறையற்ற நுண்ணுயிர் கொல்லி மருந்தை பயன்படுத்தினால் எந்த மருந்துக்கும் பயனளிக்காத வீரியமிக்க நுண்ணுயிரிகளை உருவாக்கும். இவை சத்து மாத்திரைகள் கிடையாது. எனவே, நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை, டாக்டரின் முறையான பரிந்துரை இன்றி மருந்து கடைகளில் விற்பனை செய்வதையோ, வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே அதனை வாங்கி சாப்பிட வேண்டும்.

வைரஸ் நோய் பாதிப்புகளில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரையின்படி நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை சாப்பிடும்போது, அதனை காலக்கெடு முடிவதற்குள் நிறுத்தக்கூடாது. மேலும் பொதுமக்கள் மாத்திரைகள் பயன்பாட்டை கூடிய வரை தவிர்த்து, சத்தான உணவு பொருட்களை சாப்பிடுவதும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story