தமிழகம் முழுவதும் இன்று 11-வது மெகா தடுப்பூசி முகாம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Nov 2021 12:24 AM GMT (Updated: 2021-11-25T05:54:14+05:30)

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 11-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் இதுவரை 6.71 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

மேலும், இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் இலக்கை எட்ட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து, முகாம்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்தநிலையில் 11-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஒரு கோடி அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கும் நிலையில், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து 11-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மட்டும் 40 லட்சம் அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1,600 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாட்கள் கடந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 நபர்கள் உள்ளனர். தற்போது மாநகராட்சியிடம் 10 லட்சத்து 99 ஆயிரத்து 195 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்கள் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு 2-வது தவணை தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Next Story