நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - நாளை முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - நாளை முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்
x
தினத்தந்தி 25 Nov 2021 7:06 AM GMT (Updated: 2021-11-25T12:36:07+05:30)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 150 நகராட்சிகளில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 26-ந் தேதி(நாளை) முதல் 28-ந் தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினர் வரும் 26-ந் தேதி(நாளை) காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்தி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவினர் தங்களுக்கான விருப்ப மனு படிவங்களை அதிமுக தலைமை கழகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களுக்கான கட்டணத்தையும் அதிமுக தலைமை நிர்ணயித்துள்ளது. 

அதன்படி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் 1,500 ரூபாய், நகர் மன்ற வார்டு உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் 2,500 ரூபாய், மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் 5,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

Next Story