வீட்டுமனைகளுக்கு அனுமதிபெற ஆன்லைன் வசதி


வீட்டுமனைகளுக்கு அனுமதிபெற ஆன்லைன் வசதி
x
தினத்தந்தி 25 Nov 2021 7:29 PM GMT (Updated: 25 Nov 2021 7:29 PM GMT)

வீட்டுமனைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

வீட்டுமனைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
முறைப்படுத்தும் திட்டம்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பகுதிக்கு வெளியே உள்ள அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் உள்ள தனி வீட்டுமனைகளை ஆன்லைன் மூலம் முறைப்படுத்தும் நடவடிக்கையை அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகரமைப்பு செயலாளர் விக்ராந்த் ராஜா, தலைமை நகர அமைப்பாளர் மகாலிங்கம், தேசிய தகவலியல் மைய தலைமை தகவலியல் அதிகாரி தேவ்ரத்ன சுக்லா, உதவி தலைமை தகவலியல் அதிகாரி ராஜசேகரன், தொழில்நுட்ப இயக்குனர் ஷபியுல்லா, நகரமைப்பு குழும உறுப்பினர் செயலர் புவனேஸ்வரன், முதுநிலை நகர அமைப்பாளர் கந்தர்செல்வன், இளநிலை நகர அமைப்பாளர் விஜயநேரு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தனி மனைகள்
அதாவது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் கடந்த 30-1-2017-க்கு முன் விற்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளை முறைப்படுத்தும் திட்டம் புதுச்சேரி அரசு வெளியிட்ட ஆணையின்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள தனி மனைகள், உரிய கட்டணம் பெற்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகரமைப்பு குழுமங்கள், மனைகளை முறைப்படுத்தும் அனுமதியை வழங்குகிறது.
இதுவரை விண்ணப்பங்களை பெறுதல், பரிசீலித்தல், கட்டணங்களை பெறுதல் மற்றும் முறைப்படுத்தும் அனுமதியை வழங்குதல் ஆகியவை கைமுறையாக நடந்து வந்தது.
தனி மனைகளுக்கு முறைப்படுத்தும் அனுமதி வழங்கும் முறையினை வேகப்படுத்தவும், மனித தலையீட்டினை குறைக்கவும், ஆன்லைன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பங்கள் பெறவும், அனுமதி வழங்கும் முறையினை நகர அமைப்பு குழுமங்கள் புதுச்சேரி தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தியுள்ளது.
 ஆன்லைன் மூலம்...
இதன்படி தனிமனைகளை முறைப்படுத்தும் விண்ணப்பம் பெறுதல், அதனை பரிசீலித்தல், உரிய கட்டணம் செலுத்துதல், முறைப்படுத்தும் அனுமதி வழங்குதல் ஆகிய பணிகள் ஆன்லைன் மூலம் செய்யப்படும். 
இதன் மூலம் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் வெளிப்படைத்தன்மை உண்டாகும். ஆன்லைன் மூலம் தனி மனைகளை முறைப்படுத்த https:/obps.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Next Story