அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எப்போது கிடைக்கும்?


அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எப்போது கிடைக்கும்?
x
தினத்தந்தி 25 Nov 2021 7:37 PM GMT (Updated: 25 Nov 2021 7:37 PM GMT)

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலையில் அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எப்போது கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலையில் அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எப்போது கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
அதிகார மோதல்
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அதிகாரம் தொடர்பாக அமைச்சரவை மற்றும் கவர்னர், அதிகாரிகளுக்கு இடையேயான மோதல்கள் கடந்த காலங்களில் அடிக்கடி நடந்துள்ளன.  இதன் உச்சகட்டமாக நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மிகப்பெரிய அளவில் போராட்டங்களும், சட்ட போராட்டங்களும் நடந்தன.
ஆனால் இதில் அதிகாரம் என்பது கவர்னருக்கு இருப்பதாகவே தீர்ப்புகள் வந்தன. இதன் காரணமாக புதுவையில் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மக்கள் எதிர்பார்ப்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனுப்பும் கோப்புகளை கவர்னர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதாக நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை குற்றஞ்சாட்டியது. இந்த பிரச்சினைகளுக்கு இடையே நாராயணசாமி தலைமையிலான அரசும் கவிழ்ந்தது.
இந்தநிலையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்த அரசில் மோதல்களுக்கு இடமில்லாமல் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடன் கூடிய கூட்டணி அரசு என்பதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அதற்கு தகுந்தாற்போல் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகளுக்கு அவரும் உடனடியாக ஒப்புதல் அளித்து வருகிறார்.
ஆனால் இப்போது அரசு அதிகாரிகள் யாரும் சரியாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களாலேயே எழுப்பப்படுகிறது. அதிகாரிகள் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர். அரசு பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவு
தலைமை செயலாளரை நேரில் சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்ததுடன் அவருடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னருக்கு எதிரான போராட்டத்தின்போது எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆதரவு அளிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியாளர்களின் போராட்டத்தையும் விமர்சித்தனர். 
ஆனால் இப்போது ஆளும்கட்சியினரின் செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மழை வெள்ள சேதங்களை 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும் ஒருவர் கூட பார்வையிடவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 
மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவிடம் அ.தி.மு.க. ரூ.400 கோடியும், தி.மு.க. ரூ.500 கோடியும் இழப்பீடு கேட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.300 கோடி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நிவாரணம் எப்போது?
ஆனால் தலைமை செயலாளரும், கலெக்டரும் புதுவையில் ரூ.20 கோடிக்குத்தான் சேதம் என்று அறிக்கை கொடுத்திருப்பதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினர். அப்படி அறிக்கை அளித்திருந்தால் அந்த தொகைக்கு மேல் மத்திய அரசு நிதியுதவி அளிக்க வாய்ப்பு இல்லை. அந்த நிதியுதவி கிடைக்காவிட்டால் தற்போது அனைத்து குடும்பங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகை ரூ.5 ஆயிரம் எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரையே பல நாட்கள் ஆகியும் இன்னமும் கொடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் பயிர்களுக்கான நிவாரணம் எப்போது கிடைக்கும்? என்ற ஏக்கமும் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
மாறாத காட்சி
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமைக்கு தெரிந்து சென்றார்களா? தெரியாமல் சென்றார்களா? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் நடந்து வருகிறது.
எது எப்படியானாலும் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மோதல் என்பது இப்போதும் தொடர்வதாகவே தெரிகிறது. ஆட்சி மாறினாலும் புதுச்சேரியில் காட்சிகள் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

Next Story