ரூ.82 கோடி வரி செலுத்தும்படி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை இல்லை


ரூ.82 கோடி வரி செலுத்தும்படி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை இல்லை
x
தினத்தந்தி 25 Nov 2021 11:16 PM GMT (Updated: 25 Nov 2021 11:16 PM GMT)

ரூ.82 கோடி வரி செலுத்தும்படி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய டைரி ஒன்று அதிகாரிகளிடம் சிக்கியது. அதில் பண பரிமாற்றம் தொடர்பான விவரம் இருந்தது. அதில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்களும் அந்த டைரியில் இருந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல்களின் அடிப்படையில் 2017-2018-ம் நிதி ஆண்டுக்கு ரூ.82 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 485 வருமான வரியை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ந்தேதி ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருமான வரித்துறை உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) சந்தன்குமார் நோட்டீஸ் அனுப்பினார்.

தடை வேண்டும்

இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி, “கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்ட திருத்தத்திற்கு முரணாக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். நோட்டீஸ் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என வாதிட்டார்.

வருமான வரித்துறை சார்பில் வக்கீல் ஏ.பி.சீனிவாசன் ஆஜராகி, “மனுதாரர் 2017-2018-ம் ஆண்டுக்கான வரியை செலுத்த வேண்டும் என்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு, 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் பொருந்தாது. சட்ட திருத்தம் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியிலிருந்துதான் அமலுக்கு வந்துள்ளது” என்று வாதிட்டார்.

மறுப்பு

இதையடுத்து நீதிபதிகள், “நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கு அனுப்பப்பட்ட வருமான நோட்டீஸ் இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது” என்று உத்தரவிட்டனர்.

Next Story